மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் அமீன் சோல்கர் மற்றும் பர்ஹானா ஷா ஆகியோருக்கு, மகாராஷ்டிர அரசு இன்னும் ஊதியம் வழங்கவில்லை. 2010-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சட்ட சேவைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இவர்கள், மும்பை உயர் நீதிமன்றத்தில் கசாப்பின் மேல்முறையீட்டு வழக்கை ஒன்பது மாதங்கள் கையாண்டனர். இதற்காகத் தங்கள் வழக்கமான பணிகளைத் தவிர்த்து முழுநேரமாகச் செயல்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவிப்பின்படி, அரசு வழக்கறிஞர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு முடிந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையில், தாங்கள் பணியாற்றியதற்கான விரிவான கட்டணப் பட்டியல்களையும், மணிநேரப் பதிவுகளையும் சமர்ப்பிக்குமாறு சட்ட சேவைகள் ஆணையம் கோருவது நியாயமற்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம், கசாப்பின் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மிக்கு, அரசு உடனடியாக ஊதியம் வழங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து, கசாப் 2012 நவம்பரில் எர்வாடா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.



