சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூரில் அமைக்கப்படவுள்ள பசுமை விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை மாற்றுமாறு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு (TIDCO) கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி இந்தத் திட்டத்திற்கான கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின்படி, இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு சுமார் 10,500 கோடி ரூபாயாகும்.
பசுமை விமான நிலையக் கொள்கை 2008-ன் படி, நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளைச் செயல்படுத்தும் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது விமான நிலைய மேம்பாட்டாளரையே சாரும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. விமான நிலையப் பணிகளின் காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர அனுமதிகள் கிடைப்பதைப் பொறுத்தே அமையும்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


