அமெரிக்காவில் கல்வி பயில விண்ணப்பித்த இந்திய மாணவர்களுக்கான விசா அனுமதி, 2025-ஆம் ஆண்டின் முக்கிய சேர்க்கை காலமான மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 62 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 58,694 விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 22,149 ஆகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீன மாணவர்களுக்கான விசா அனுமதி 34 சதவீதம் மட்டுமே சரிந்து, 61,075-லிருந்து 40,034 ஆகக் குறைந்துள்ளது. 2017 முதல் 2024 வரையிலான சராசரி எண்ணிக்கையை விட, இந்திய மாணவர்களுக்கான விசா அனுமதி தற்போது சுமார் 60 சதவீதம் குறைவாக உள்ளது.
இந்த சரிவு ஏற்பட்ட போதிலும், 2024-25 கல்வியாண்டில் 3,63,019 மாணவர்களுடன் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்களைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும், அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பணிபுரியும் 'ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்' (OPT) திட்டத்தில் இந்தியர்களே அதிக அளவில் பங்கேற்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் 2,94,253 பட்டதாரிகளில் பாதியளவு இந்தியர்கள் ஆவர். 2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 1,65,524 STEM OPT நீட்டிப்பு அனுமதிகளில் 79,331 அனுமதிகளை இந்தியர்கள் பெற்றுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியுள்ள கடுமையான குடியேற்றக் கொள்கைகளே இந்த விசா சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதியின்படி, F-1 விசா வைத்திருப்பவர்களின் தங்கும் காலம் நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், பட்டப்படிப்பு முடிந்த பிறகு தங்குவதற்கான அவகாசம் 60 நாட்களிலிருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் OPT திட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற விவாதங்கள், அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்திய பட்டதாரிகளுக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




