பிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனம், பிரீமியம் ரக மளிகைப் பொருட்கள் சந்தையில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக, பிரத்யேகமான 'கோர்மெட்' (gourmet) ரகப் பொருட்கள் மற்றும் 'பைக்' (Pykd) என்ற சொந்த தயாரிப்பு பிராண்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீஸ், சிறப்பு வகை காபி, மரச்செக்கு எண்ணெய், நெய், ராமன், சாக்லேட்டுகள், கொம்புச்சா மற்றும் போபா உள்ளிட்ட உயர்தரப் பொருட்கள் இந்த புதிய வரிசையில் இடம்பெற்றுள்ளன.
தற்போது 'பைக்' பிராண்டின் கீழ் நம்கீன் மற்றும் சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வரும் காலங்களில் இந்த பிராண்டின் கீழ் கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விரைவு வர்த்தக சந்தை 2030-ம் ஆண்டிற்குள் 65 பில்லியன் டாலர் முதல் 70 பில்லியன் டாலர் வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக மதிப்புள்ள நுகர்வோர் சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் பிளிப்கார்ட் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

