2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இழந்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ள அந்த அணி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முதல் எட்டு இடங்களுக்குள் முன்னேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியை நடத்தும் நாடுகள் மற்றும் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.
உலகக் கோப்பையில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தத் தகுதிச்சுற்றில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறினால் மட்டுமே அந்த அணியால் உலகக் கோப்பை பிரதான சுற்றுக்குச் செல்ல முடியும்.




