வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பு கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் உரிமையை அமெரிக்கா பெறுகிறது. புதிதாக உருவாக்கப்படும் தனியார் நிறுவனத்தில் அமெரிக்கா 55 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம், உற்பத்தி செலவிலேயே எண்ணெயை வாங்கும் உரிமையும், 100 ஆண்டுகளுக்கான மேம்பாட்டு உரிமைகளும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும், இதன் வாயிலாக வெனிசுலா அரசுக்கு 209 பில்லியன் டாலர் வரி வருவாய் கிடைக்கும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பை நிரப்பவும், ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட உள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் துறையை தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வெனிசுலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அவற்றைச் சீரமைக்க நீண்ட காலமும் அதிக முதலீடும் தேவைப்படும். எனவே, அமெரிக்காவில் எரிபொருள் விலையில் உடனடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளால் எரிபொருள் விலை உயர்வு அழுத்தத்தை அமெரிக்கா எதிர்கொண்டு வரும் நிலையில், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


