சீன எல்லைக்கு அருகே பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது. ரசுவா பகுதியில் புதன்கிழமை தொடங்கிய இந்த பேரிடரால் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் 777 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 2,478 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 121 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். போதேகோஷி மற்றும் திரிசூலி நதிப் பகுதிகளில் நிலவும் மோசமான தரைப்பகுதி மற்றும் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள நீர் மட்டம் உயர்ந்ததாலும், புதிதாக உருவான ஏரி நிரம்பி வழியும் அபாயம் ஏற்பட்டதாலும் வெள்ளிக்கிழமை மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடும் பாதிப்புக்குள்ளான கிரிாங் எல்லைப் பகுதிக்கு சீன மீட்புக் குழுவினர் வந்து சேர்ந்துள்ளனர். இருப்பினும், சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




