சென்னை முகப்பேரில் உள்ள காசா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாகக் கூறி ரூ.34 கோடி பெற்று மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி, குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு வசிக்கும் 370-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் முறையான பராமரிப்பு வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பு நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், மாதம் ரூ.32 லட்சம் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு நீடிப்பதாகத் தெரிவித்தார். மேலும், சோலார் மின் உற்பத்தி வசதி வாக்குறுதி அளித்தபடி அமைக்கப்படாததால், மின் கட்டணமாக மாதம் ரூ.7 லட்சம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநகராட்சியிடம் பேசி அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிர்வாகம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால், துறை சார்ந்த அமைச்சர்களிடம் புகார் அளிக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.


