மும்பை டர்பே டிடிசி தொழிற்பேட்டையில் உள்ள சாதனா என்டர்பிரைசஸ் நிறுவனத்தில், பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை மாற்றும் மோசடி கும்பலை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் மற்றும் நவி மும்பை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 24 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த சோதனையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த உணவுப் பொருட்களின் லேபிள்கள் திருத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த மோசடியில் டெல்லி மற்றும் நொய்டாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது, லே'ஸ், குர்குரே, மேகி, நார், ரசோய், ஹெல்மன்ஸ், தம்ஸ் அப் மற்றும் லிம்கா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் அடங்கிய 8,442 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அசல் தகவல்களை அழித்துவிட்டு, புதிய ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் தேதிகளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இங்க்ஜெட் பிரிண்டர்கள், தின்னர்கள் மற்றும் போலி ஸ்டிக்கர்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த கிடங்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி வலையமைப்பின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.




