டில்லியில் ஓடும் பஸ்ஸில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது; உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவர், குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நொய்டாவில் உள்ள தனது உறவினரை சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆகஸ்ட் 4 அன்று இரவு கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது, பாரி சவுக் பகுதியில் தவறுதலாக இறங்கி விட்டார். கனமழைக்கு நடுவே தவித்துக் கொண்டிருந்த அந்த சிறுமி, அந்த வழியாக வந்த ஸ்லீப்பர் பஸ்ஸில் லிப்ட் கேட்டுள்ளார். அந்தப் பஸ்ஸின் டிரைவர் குல்தீப் மற்றும் உதவியாளர் சந்தீப் ஆகியோர், சிறுமியை பஸ்ஸில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
அந்தப் பஸ் பழுது பார்க்க வொர்க் ஷாப் கொண்டு சென்று கொண்டிருந்ததால், பயணிகள் யாரும் அதில் இல்லை. சிறுமி பஸ்ஸில் ஏறிய உடனே உதவியாளர் சந்தீப், அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பின்னர், குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி ஏறிய இடத்தில் இருந்து சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து காஷ்மீர் கேட் பகுதியில், அவரை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து பஸ்ஸில் தப்பியோடி விட்டனர்




