பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் ஜவஹர்லால் நேரு, பெரியார் ஈ.வெ.ரா, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் நீதிக்கட்சி குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில், 1951-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டங்கள் மற்றும் முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் குறித்த தகவல்கள் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக நீதி வரலாற்றை அழிக்கும் திட்டமிட்ட சதி என திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நீக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்துப் பதிலளித்துள்ள அமைச்சர் வி.சம்பத் குமார், இந்தத் தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார். கொள்கை விளக்கக் குறிப்பின் திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


