நேபாளத்தில் உள்ள போட்கோஷி நதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் நேபாள அரசு காலநிலை இழப்பீடு கோரியுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சுமார் 4,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.
இது வெறும் உதவி அல்ல, மாறாக தார்மீக மற்றும் சட்டப்பூர்வமான கடமை என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சிசீர் கனால் தெரிவித்துள்ளார். உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் நேபாளத்தின் பங்கு மிகக் குறைவு என்றாலும், காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்தித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, அதிக அளவில் கார்பன் வெளியேற்றும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா, நேபாளம் போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தை சர்வதேச மேடைகளில் வலுவாக முன்வைக்க நேபாளம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், நேபாள நிதி அமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே மற்றும் வனத்துறை அமைச்சர் கீதா சவுத்ரி ஆகியோர் இணைந்து, 'இழப்பு மற்றும் சேதம்' (Loss and Damage) நிதி வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நாட்டின் மீட்புப் பணிகளின் திறனைத் தாண்டி பாதிப்புகள் உள்ளதால், உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவது தெற்காசியாவின் நீர் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக நேபாள அரசு எச்சரித்துள்ளது.



