நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 6,541 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 4,858 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களில் உடல் கிடைக்காதவர்களுக்கு பசுபதிநாத் கோயிலில் அடையாள இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்திய விமானப்படையின் 5-வது விமானம் மூலம் 11 மீட்புக் குழுவினரும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய வெளிநாட்டினர் 324 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, காணாமல் போனதாகக் கருதப்பட்டவர்களில் 5 பேர் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், காணாமல் போன மற்ற 590 வெளிநாட்டினரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


