தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கவலை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் சரிந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2025 ஆகஸ்டில் 10,329 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் 10,189 கோடியாகக் குறைந்துள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 38 சதவீதம் ஜிஎஸ்டி மூலம் கிடைப்பதால், இந்த சரிவு கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா ஒன்பது சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் சூழலில், தமிழ்நாடு மட்டும் சரிவைச் சந்திப்பது பொருளாதார ரீதியாக முக்கிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி தேவைப்படும் நிலையில், வருவாய் குறைவு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
இந்த நிலை நீடித்தால் அரசு செலவுகளைக் குறைக்குமா அல்லது கூடுதல் கடன் வாங்குமா என்ற கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார். வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்காகவே இருக்கும் என விமர்சித்துள்ள அவர், இந்த சரிவுக்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


