அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கோயில் நிர்வாகத்தில் நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பதவிக்காக பெறப்பட்ட 5,585 விண்ணப்பங்களில் இருந்து கடுமையான தேர்வு முறைகள் மூலம் ஜீதேந்திர மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிச் சுற்றில் பங்கேற்ற 16 பேரில் இருந்து அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி விமானப் படையின் மேற்கு விமானப் படைத் தலைமைத் தளபதி பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனுடன், அறக்கட்டளையின் புதிய அறங்காவலர்களாக மகேஷ் பாக்சந்த்கா, மதன் மோகன் பாண்டே மற்றும் நிர்மலா யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.






