திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 4-ம் தேதி இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மறுநாள் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்துள்ள 26 பக்க குற்றப்பத்திரிகையில், கே.என்.நேருவின் சகோதரர்கள், உதவியாளர் கவி பிரசாத், கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். கட்சி நிதி என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்குப் பணிகள் ஒதுக்கப்பட்டதற்கான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் குறுந்தகவல்கள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



