அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சமூக வலைதளங்களில் வெளியிட்ட விளம்பரப் பதிவு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 'சிங்' என்ற குடும்பப் பெயரைத் தாங்கிய நபர்களைக் குறிவைக்கும் வகையில் அமைந்த அந்தப் பதிவில், 'சுயமாக வெளியேறுங்கள் அல்லது விளைவுகளைச் சந்தியுங்கள்' (Self-deport or find out) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆவணமற்ற குடியேறிகள் தாங்களாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கும் 'சிபிபி ஹோம்' (CBP Home) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்த விளம்பரம் இனவெறியைத் தூண்டும் வகையில் உள்ளதாக இந்து அமெரிக்க அறக்கட்டளை மற்றும் சீக்கியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க லாரி ஓட்டுநர் பணியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் சீக்கியர்களை, சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் என்று பொதுமைப்படுத்தி இந்த விளம்பரம் சித்தரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முகமையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து அமெரிக்க அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் முன்வந்து வெளியேறும் ஆவணமற்ற குடியேறிகளுக்குப் பயண உதவி மற்றும் 2,600 டாலர் வெளியேறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.






