குண்டர் சட்டத்தை துன்புறுத்தலுக்கான கருவியாகப் பயன்படுத்துவதாக உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை பொது அமைதியைப் பேணுவதற்கு மட்டுமே மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என லக்னோ அமர்வின் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி வலியுறுத்தினார்.
கோண்டா மாவட்ட ஆட்சியர், ஜாஹித் அலி என்பவரை 'குண்டர்' என அறிவித்து ஆறு மாதங்களுக்கு வெளியேற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தபோது நீதிமன்றம் இந்த கருத்துகளைத் தெரிவித்தது. அலி மீதான இரண்டு குற்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு வழக்கில் அவர் 2017-ல் விடுதலையாகியுள்ளார். மற்றொரு வழக்கின் அறிக்கை, இத்தகைய கடுமையான நடவடிக்கைக்குப் போதுமானதாக இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மனுதாரரின் கடந்தகாலப் பதிவுகளுக்கும், 2026-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் இடையே எந்தவிதமான தர்க்கரீதியான தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அதிகாரிகள் உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்தது. விடுதலையான வழக்கையும், ஆதாரமற்ற அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.



