பெங்களூருவில் காலாவதியான புற்றுநோய் மருந்துகளைப் போலியான லேபிள்களுடன் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு மினர்வா சர்க்கிள் அருகே செயல்பட்டு வந்த 'க்ருபா ஹெல்த்கேர்' (Krupa Healthcare) மருந்தக உரிமையாளர் வீரேஷ் குமார் ஜெயின் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையும் இணைந்து நடத்திய சோதனையில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான லேபிள்கள் ஒட்டப்பட்ட காலாவதியான மருந்துகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மருந்துகள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் உள்ள 90-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு இந்த போலியான மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.



