அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து, செப்டம்பர் 22-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளத்தில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், புதுச்சேரி திருக்கனூர் மற்றும் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




