டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்டோபர் 6) வெளியிடப்பட உள்ளது. இந்தத் தேர்வு மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குரூப்-சி பணியிடங்களும் இத்தேர்வின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்றாலும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு அட்டவணையின்படி, இந்தத் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.





