2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு, ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு (IceCube Neutrino Observatory) ஆற்றிய முக்கிய பங்களிப்பு மற்றும் விண்வெளி சார்ந்த உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களைக் கண்டறிந்ததற்காக பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது. பூமியில் உள்ள ஆய்வகங்களை விட மில்லியன் மடங்கு அதிக ஆற்றல் கொண்ட துகள்களை விண்வெளி இயற்கையாகவே வெளியேற்றுகிறது. இந்தத் துகள்கள் எங்கிருந்து வருகின்றன, அவற்றின் தன்மை என்ன என்பது நீண்டகாலமாக மர்மமாகவே இருந்து வருகிறது.
மற்ற துகள்களைப் போலல்லாமல், நியூட்ரினோக்கள் திசை மாறாமலும் ஆற்றல் இழக்காமலும் பூமியை வந்தடைவதால், அவை விண்வெளி குறித்த அரிய தகவல்களை வழங்குகின்றன. தென் துருவத்தில் நியூட்ரினோக்களைக் கண்டறியும் தனது திட்டத்தை பிரான்சிஸ் ஹால்சன் முதன்முதலில் 1988-இல் முன்வைத்தார். நியூட்ரினோக்கள் அணுக்கருவுடன் மோதும்போது உருவாகும் ஒளிக்கீற்றுகளை, தென் துருவத்தின் தெளிவான பனிப்பாறைகளில் பொருத்தப்பட்ட உணர்விகள் மூலம் கண்காணிக்க முடியும். நிலநடுக்கம் போன்ற இடையூறுகள் இல்லாத, புவியியல் ரீதியாக நிலையான தென் துருவத்தின் பனிப்பகுதிகள் இந்த ஆய்வுக்கு மிகவும் உகந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
