டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடமாக ஜந்தர் மந்தர் இனி செயல்படாது என டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களுக்கான மாற்று இடங்களைக் கண்டறிய இந்தக் குழு அமைக்கப்பட்டது.
டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, போராட்டங்களுக்காக ராம்லீலா மைதானம், புராடி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இடங்களில் போராட்டங்களை நடத்துவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




