23 ஆண்டுகளுக்கு முன்பு ‘சண்டியர்’ படத் தலைப்பை மாற்ற வைத்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது அதே பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ள கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது 237-வது திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளார். எஸ்.யு. அருண்குமார் இயக்கும் இப்படத்தின் தலைப்பும், முதல் தோற்றப் போஸ்டரும் கமல்ஹாசனின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
படத்தின் விளம்பரத்தில் ரத்தம் மற்றும் பழிவாங்குதல் தொடர்பான காட்சிகளும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளதை விமர்சித்துள்ள அவர், பிறந்தநாளில் பழிக்குப் பழி என்ற கருத்துடன் கமல்ஹாசன் படத்தை அறிவித்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கமல்ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி, எம்பியாக உள்ள ஒருவர் சாதி, மதம் சார்ந்து செயல்படக்கூடாது என்றும், கமல்ஹாசனின் இந்த நடவடிக்கை அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறானது என்றும் விமர்சித்துள்ளார்.
2003-ல் நடந்த சர்ச்சை என்ன?
கடந்த 2003-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கிய திரைப்படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டது.
அந்தத் தலைப்பு சாதிய ஆதிக்கத்தையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து போராட்டங்கள் நடைபெற்றதால், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த கமல்ஹாசன், படத்தின் பெயரை ‘விருமாண்டி’ என மாற்றினார். அந்தத் திரைப்படம் 2004-ஆம் ஆண்டு வெளியானது.
மீண்டும் அதே மோதல்!
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல்ஹாசன் மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அன்றைய எதிர்ப்பின் மையமாக இருந்த கிருஷ்ணசாமியே மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம் திரைப்படத்தின் தலைப்பைத் தேர்வு செய்வது படைப்புச் சுதந்திரம் என்ற கருத்து நிலவுகிறது. மறுபுறம், சமூகத்தில் சாதிய வன்முறையை நினைவூட்டக்கூடிய சொற்களையும் காட்சிகளையும் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வு அவசியம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
23 ஆண்டுகளுக்கு முன்பு பெயரை மாற்றிய கமல்ஹாசன், இம்முறை அதே தலைப்பில் உறுதியாக இருப்பாரா அல்லது மீண்டும் மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

