மதுரையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில், முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்பாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற சாதாரண மனிதர் உயிருடன் வீடு திரும்ப முடியாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது என்றும், காவல் நிலையங்கள் மக்களின் உயிரைப் பறிக்கும் இடங்களாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த கால ஆட்சியில் காவல் மரணங்கள் நிகழ்ந்தபோது, மன்னிப்பு தேவையில்லை, நீதிதான் வேண்டும் என்று முழங்கியவர் விஜய். தற்போது அவரது ஆட்சியில் காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு அவர் என்ன நீதி வழங்கப்போகிறார் என சீமான் வினவியுள்ளார். குற்றங்களில் ஈடுபடும் தங்களுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் அறிவுரை கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



