மேம்பட்ட கணைய புற்றுநோய்க்கான சிகிச்சையில் 'டாராக்சோன்ராசிப்' (daraxonrasib) எனும் புதிய மாத்திரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்கட்ட மருத்துவ சோதனைகளில், கீமோதெரபியுடன் இந்த மருந்தைச் சேர்த்து வழங்கியபோது, பங்கேற்ற 61 பேரில் ஒருவருக்குக் கட்டிகள் ஸ்கேன் பரிசோதனையில் தெரியாத அளவுக்குக் குறைந்துள்ளன. மற்ற நோயாளிகளிடம் கட்டிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றம் பல தசாப்தங்களில் கணைய புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மைல்கல் என கேன்சர் ரிசர்ச் யுகே (Cancer Research UK) அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்து, கணைய புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சிக்குக் காரணமான 'ராஸ்' (RAS) மரபணு மாற்றங்களை முடக்கும் வகையில் செயல்படுகிறது. மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த டாக்டர் வுங்கி பார்க் கூறுகையில், இந்த சிகிச்சை மூலம் நோயைக் கட்டுப்படுத்தும் காலம் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது எதிர்காலத்தில் நோயாளிகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், இந்த மருந்து புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்தும் என்று கூற முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புற்றுநோய் மீண்டும் வர வாய்ப்புள்ளதால், நீண்ட கால ஆய்வுகள் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நுரையீரல் மற்றும் கருப்பை புற்றுநோய்களிலும் இதேபோன்ற மரபணு மாற்றங்கள் காணப்படுவதால், இந்த மருந்தின் வெற்றி மற்ற வகை புற்றுநோயாளிகளுக்கும் பயனுள்ளதாக அமையலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





