கிளீவ்லேண்ட் கிளினிக் நடத்திய முதற்கட்ட மருத்துவ ஆய்வில், CRISPR-Cas9 மரபணு எடிட்டிங் சிகிச்சை மூலம் எல்.டி.எல் (LDL) கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை சுமார் 50 சதவீதம் குறைக்க முடிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்துகள் பலனளிக்காத 15 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், CTX310 எனப்படும் இந்த சிகிச்சை, கல்லீரலில் உள்ள ANGPTL3 மரபணுவை செயலிழக்கச் செய்வதன் மூலம் செயல்படுகிறது. ஒருமுறை செலுத்தப்படும் இந்த சிகிச்சையின் பலன், எவ்வித தீவிர பக்கவிளைவுகளும் இன்றி 12 மாதங்கள் வரை நீடித்தது நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த CRISPR Therapeutics AG நிறுவனம் இந்த ஆய்வுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
இதன் பாதுகாப்பு அம்சங்கள் ஊக்கமளிப்பதாக உள்ளதாக ஆய்வின் முதன்மை ஆசிரியரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் லூக் லாஃபின் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) பரிந்துரைப்படி, பங்கேற்பாளர்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இதனிடையே, அமெரிக்க இதய சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், கடுமையான ஹைப்பர்-ட்ரைகிளிசரைடிமியா பாதிப்புள்ள 10 பெரியவர்களிடம் இந்த சிகிச்சை அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ட்ரைகிளிசரைடு அளவுகள் 63 முதல் 85 சதவீதம் வரை குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் அபாயங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்த மரபணு மாற்ற சிகிச்சை ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






