பூமியிலிருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மெஸ்ஸியர் 87 (M87) விண்மீன் திரளின் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையின் புகைப்படத்தை, ஈவென்ட் ஹொரைசன் தொலைநோக்கி (EHT) குழுமம் 2019-ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் துல்லியமானது என்பதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
'GenDiRECT' என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழைய தொலைநோக்கி தரவுகளை மறுஆய்வு செய்ததில், அதே வளைய வடிவ கருந்துளை படம் துல்லியமாகக் கிடைத்துள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம், கருந்துளைகளின் இருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற அமைப்பு குறித்து 1915-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முன்வைத்த 'பொதுச் சார்பியல் கோட்பாடு' மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருந்துளையின் புகைப்படத்தை எடுப்பது என்பது பூமியில் நின்றுகொண்டு நிலவில் இருக்கும் ஒரு டோனட் (Doughnut) புகைப்படத்தை எடுப்பதற்குச் சமமான கடினமான செயல் என ஆஸ்திரேலியாவின் CSIRO அமைப்பின் ஆராய்ச்சியாளர் சாமுவேல் லாய் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வு எல்லைக்கு (event horizon) சுற்றியுள்ள பகுதி மிகுந்த வெப்பத்துடன் ஒளிரும் பிளாஸ்மா வளையமாகவும், அதன் மீது கருந்துளையின் நிழல் விழுந்தும் காணப்படும் என ஐன்ஸ்டீன் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





