கோயிலுக்குச் சொந்தமான தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்து விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழக அரசின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால் விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது?
கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, கந்தர் மலையைச் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும், முருக பக்தர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு, வழிபாட்டு உரிமைகளைத் திட்டமிட்டுப் பறிக்கும் தமிழக அரசுக்கு முருக பக்தர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராகச் செயல்படும் அரசுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





