பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட சுமார் இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட சிறிய சிறுகோள் ஒன்று, தற்காலிகமாக பூமியின் நிலவாக வலம் வருகிறது. '2026 QQ8' என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், கடந்த ஏப்ரல் மாதம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இது வரும் டிசம்பர் மாதம் தொடக்கம் வரை பூமியைச் சுற்றி வரும் என்றும், அதன் பிறகு சூரியனை நோக்கிய தனது பயணத்தைத் தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்பொருளை கடந்த ஆகஸ்ட் மாதம் வானியலாளர் கிறிஸ்டியன் சார்நெக்ஸி முதன்முதலில் கண்டறிந்தார். அரிசோனா மற்றும் ஹவாய் பகுதிகளில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீடுகளுக்குப் பிறகு, இது செயற்கைக்கோள் கழிவு அல்ல, மாறாக ஒரு இயற்கையான விண்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. இத்தகைய சிறிய விண்பொருட்கள் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருவது அரிதான நிகழ்வு அல்ல என்றாலும், அவற்றின் சிறிய அளவு மற்றும் அதிவேகம் காரணமாக அவற்றைக் கண்டறிவது சவாலானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுகோளால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஒருவேளை இது வளிமண்டலத்திற்குள் நுழைந்தாலும், அது சிதைந்து அழிந்துவிடும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வருங்காலங்களில் இத்தகைய விண்பொருட்கள் பலவற்றைத் தொடர்ந்து கண்டறிய முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





