செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, சித்திரவதையால்தான் பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்தது. மேலும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஆய்வாளர் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் என நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்டப்பூர்வமான கைது நடவடிக்கை இன்றி, பாதிக்கப்பட்டவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குற்றம் செய்தவராக இருந்தாலும், காவல்துறை அவரை உடல் ரீதியாகத் துன்புறுத்தவோ சித்திரவதை செய்யவோ உரிமை இல்லை என நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் மனைவி சுதாவை ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சிபி-சிஐடி (CB-CID) விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.





