தமிழக வெற்றிக் கழகத்தின் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் மேரி வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். மாநிலத்தின் மொத்த கடன் ரூ. 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வட்டி செலுத்துதல் 61 சதவீதம் அதிகரித்துள்ளதும் வெள்ளை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ள நிலையில், இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளை ஊக்குவிக்க ரூ. 50,000 கோடி முதலீட்டு நிதியை அரசு அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நலத்திட்ட உதவிகளை தானியங்கி முறையில் வழங்கும் 'நோ-அப்ளிகேஷன் கவர்னன்ஸ்' (No-Application Governance) முறை மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த ஏஐ சிட்டி (AI City) மற்றும் பல்கலைக்கழகம் அமைப்பது போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. தேர்தல் வாக்குறுதிகளையும், மாநிலத்தின் நிதி நிலைமையையும் அரசு எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறது என்பதை கல்வியாளர்களும் பொதுமக்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.
தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைந்துள்ள சூழலில், அரசின் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை வெளிப்படைத்தன்மையுடன் விளக்கும் வகையில் பட்ஜெட் உரை நேரலையாக ஒளிபரப்பப்படும் என அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


