சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சிகள் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


