அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை, அந்த நாட்டுடனான மோதலைத் திட்டமிட்டு நீட்டிக்க ஈரான் பரிசீலித்து வருவதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரெசா நக்வி தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பிபிஎஸ் நியூஸ் ஹவர் (PBS NewsHour) ஊடகத்திடம் பேசிய அவர், இந்த நீண்டகால மோதல் உத்தி மூலம் அமெரிக்காவிற்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தவும், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் நீண்டகாலத் தற்காப்பு அரணை உருவாக்கவும் ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரான் வெற்றி பெற்று வருவதாகவும், அமெரிக்க ராணுவம் முன்பு கருதப்பட்டதை விட பலவீனமானது என்பதைத் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் நக்வி கூறினார். ஈரானின் ஏவுகணை உற்பத்தி, தற்போதைய பயன்பாட்டை விட அதிகமாக இருப்பதால், பல ஆண்டுகளுக்குத் தொடர் மோதல்களைச் சமாளிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மோதல் தீவிரமடைந்தால், அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நலன்களுக்கு ஈரான் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.



