இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு சற்று முன்னதாக, 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 6.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உட்பட டஜன் கணக்கான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
தூக்கத்தில் இருந்தபோது கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானதாக கிழக்கு நுசா தென்காரா மாகாண ஆளுநர் இமானுவேல் மெல்கியாடெஸ் லாகா லேனா தெரிவித்தார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடற்கரை பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேறத் தொடங்கிய நிலையில், சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை தற்காலிகமானது என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. மேலும், தொடர் பின் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சேதமடைந்த கட்டிடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





