தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார். வள்ளுவர் கோட்டம், நேரு அரங்கம், கோயம்பேடு மற்றும் திண்டிவனம் பேருந்து நிலையங்கள் ஏரிப் பகுதிகளில் அமைந்துள்ளதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் விவரங்கள் தெரியாமல் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் முறையாகப் பட்டியலிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, ஐந்து ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட அனைத்து நீர்நிலைகளையும் டிஜிட்டல் மேப்பிங் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சரை அவர் வலியுறுத்தினார்.

