ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆரம்பகால பிரபஞ்சத்தைச் சேர்ந்த 'கருந்துளை நட்சத்திரம்' (Black hole star) என்ற புதிய வகை விண்வெளிப் பொருளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். MoM-BH*-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பொருள், அடர்த்தியான ஹைட்ரஜன் வாயு மண்டலத்தால் சூழப்பட்ட பிரம்மாண்டமான கருந்துளையைக் கொண்டுள்ளது. இது ஒரு பிரகாசமான சிவப்புப் புள்ளியாகக் காட்சியளிக்கிறது.
வழக்கமான நட்சத்திரங்கள் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலைப் பெறுகின்றன. ஆனால், இந்த பொருள் தனது மையத்திலுள்ள கருந்துளை மூலம் அதீத பிரகாசத்தை உருவாக்குகிறது. இந்த கருந்துளையின் நிறை சூரியனை விட 1,00,000 மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். 'பால்மர் பிரேக்' (Balmer break) எனப்படும் ஒளிச்சிதைவு மற்றும் உலோகத் தனிமங்கள் இல்லாதது போன்ற காரணங்களை வைத்து, இது சாதாரண நட்சத்திரம் அல்ல என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த 'சிறிய சிவப்புப் புள்ளிகள்' ஆரம்பகால பிரபஞ்சத்தில் பொதுவாகக் காணப்படுபவை என்று முதன்மை ஆய்வாளர் ரோஹன் நாயுடு மற்றும் அவரது குழுவினர் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவை விண்மீன் திரள்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், MoM-BH*-1 தனித்துவமான பிரகாசத்துடன் இருப்பதால், கருந்துளை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒளியை நேரடியாகக் கண்காணிக்க முடிவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


