மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பகுதியில் உள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை அகற்றி, அந்த நிலங்களைக் கையகப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேகமலை வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அகற்ற ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள கட்டிடங்களை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், இப்பகுதிக்குத் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.


