நேபாளத்தில் ஏற்பட்ட கடும் பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியிருந்த 21 தமிழர்கள் மீட்கப்பட்டு, நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர்களை, அங்கு முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்து நலம் விசாரித்தது. அவர்களுக்குத் தேவையான முதலுதவி மற்றும் உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேபாளத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றிருந்தவர்களில், ரசுவா பகுதியில் சிக்கியுள்ள 85 தமிழர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே, மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் குழு அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தமிழக அமைச்சர்கள் குழு ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்திரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. நேபாளத்தில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


