நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பெட்டகத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்ததாக 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரசுவா மாவட்டத்தின் போட்டிகோஷி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த வங்கிப் பெட்டகம், இரண்டு நாட்களுக்குப் பிறகு தடிங் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 92 லட்சத்து 68 ஆயிரத்து 505 நேபாள ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 19 முதல் 49 வயதுக்குட்பட்ட இந்த நபர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்; மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், மற்றொரு சம்பவத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவரின் உடலிலிருந்து தங்கக் கம்மல்களைத் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




