ஹார்முஸ் நீரிணையில் உள்ள லாரக் தீவில், ஈரானின் இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தின. கடல் கண்ணிவெடிகளை ஏற்றிச் செல்லும் ஏவுகணைகளை நிலைநிறுத்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வீரர்கள் தயாராகியதைக் கண்டறிந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் தங்களது ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகத் தகுந்த தண்டனை வழங்கப்படும் என புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் வைக்கப்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.




