அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் சுமார் 15 பேர் மாயமாகியுள்ளனர். பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் பேண்டம் ராஞ்ச் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்த நடைபாலங்கள் சேதமடைந்ததோடு, சுமார் 62 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய பூங்கா நிர்வாகம் சார்பில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காட்டன்வுட் முகாம் மற்றும் பேண்டம் ராஞ்ச் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை காயங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், அப்பகுதியில் இருந்த மலையேற்ற வீரர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் அபாயம் நீடிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு ஒரு அங்குலம் என்ற அளவில் மழை பெய்து வருவதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருளும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையேற்றப் பாதைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.



