நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் உண்டான திடீர் வெள்ளத்தில் சிக்கி நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,925 பேர் மாயமாகியுள்ள நிலையில், ஆறாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திபெத் பகுதியில் 16 பேர் உயிரிழந்தும், 546 பேர் மாயமாகியும் உள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் மொத்த பலி எண்ணிக்கை 955 ஆகவும், மாயமானவர்களின் எண்ணிக்கை 4,471 ஆகவும் உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் மட்டும் 39 நாடுகளைச் சேர்ந்த 590 வெளிநாட்டினர் மாயமாகியுள்ளனர். இந்திய தூதரகம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து இந்தியர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்திய தடயவியல் குழுவினர் உடல்களை அடையாளம் காணும் பணியில் உதவி வருகின்றனர்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க சிறப்பு தடயவியல் உபகரணங்கள், டிஎன்ஏ பரிசோதனை கருவிகள் மற்றும் கனரக மீட்பு இயந்திரங்கள் உள்ளிட்ட அவசர சர்வதேச உதவிகளை நேபாளம் கோரியுள்ளது. அடையாளம் காணப்படாத உடல்கள் பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு உரிய நெறிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் அம்ரித் பகதூர் ராய் தெரிவித்தார். இதனிடையே, திபெத்தில் உள்ள தனது நீர்மின் திட்டங்களால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என மறுத்துள்ள சீனா, 2.2 மில்லியன் டாலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.




