தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையிலிருந்து கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோயில்களுக்குள் அதிகரித்து வரும் ரீல்ஸ் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தவே இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டது.
கோயிலுக்கு வெளியே செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கு வசூலிக்கப்படும் 5 ரூபாய் கட்டணம் குறித்து தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தத் தொகை கோயில் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும், அன்னதானத் திட்டத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட சில இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்த செல்போன் தடை, தற்போது 52 கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

