தற்போதைய தமிழக அரசு பதவியேற்ற 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் இதுவரை எந்த விளக்கமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு தற்போதைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்த நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், காவல் மரணங்கள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். புதிய அரசு பொதுமக்களிடையே ஒரு வலுவான செய்தியைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்ததற்கான காரணங்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்க அரசுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் உரிய விளக்கத்துடன் தயாராக வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

