துலீப் கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தென் மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோதுகின்றன. ரசிகர்கள் தினமும் காலை 9 மணி முதல் 4-வது நுழைவு வாயில் வழியாக மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கான இருக்கைகள் சி, டி மற்றும் இ கீழ்நிலை அரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.
திலக் வர்மா தலைமையிலான தென் மண்டல அணி, அரையிறுதியில் வட மண்டல அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி, மத்திய மண்டல அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.




