மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பண்டா தாலுகாவுக்கு உட்பட்ட பராஜ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராக் சுஜானியா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மது அருந்தியவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



