வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலைமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட ஏழு சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்ட போதிலும், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும், புதிய ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை வங்கிகளே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தினால் தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.




