ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு மற்றும் மிரட்டலையே அரசியல் ஆயுதங்களாக திமுக பயன்படுத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக முன்பு பொறுப்பு வகித்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும் பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து தரக்குறைவாகப் பேசுவதாகவும், மாற்றுக் கட்சியினரை அவமதித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தைக் காட்டுவதற்கான பதவி அல்ல என்று குறிப்பிட்டுள்ள ரமேஷ், அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் தற்போது “மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்துகொள்வது வெட்கக்கேடானது” என்று விமர்சித்துள்ளார்.
“எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசினாலும், அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது தங்களது அரசியல் பண்பாடு அல்ல என்றும், முதல்வர் தங்களை அவ்வாறு வளர்க்கவில்லை என்றும் ரமேஷ் கூறியுள்ளார். அதேநேரம், “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால் அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்” என்று எச்சரித்துள்ளார்.
அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்; ஆனால் அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F12%2Fnellaiprotestpowercut-2026-09-12-11-06-47.jpg&w=3840&q=75)
