ஃபிளை துபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் தாக்கி, விமானத்தைத் தகர்க்கத் திட்டமிட்டதாக ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் செயலுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் பிடியில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தின் உள்ளே இருந்த கோடரியால் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் துணை விமானி தாக்கினார். எனினும், காயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்ட ஸ்மித் மச்சார், பயணிகளின் உதவியுடன் விமானத்தைச் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
விமானத்தைத் தகர்க்கத் திட்டமிட்டதாகவும், மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை என்றும் சவுதி அரேபியா காவல்துறையிடம் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையில் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் செயலுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




